சுகாதார சீர்கேடாகும் கிடக்கும் குப்பைகளை அகற்றக்கோரி யானைமலை மீது ஏறி போராட்டம்

ஒத்தக்கடை ஊராட்சி தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அதனை அகற்றக்கோரி 20–க்கும் மேற்பட்டோர் யானைமலை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-13 23:00 GMT

புதூர்,

ஒத்தக்கடை ஊராட்சி பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. மேலும் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றவும், குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுத்தபாடில்லை. இதற்கிடையே ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மயான பகுதியில் கொட்டப்படுகிறது. ஆனால் அவை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்காததால் மலை போல் அங்கு குப்பைகள் குவிந்து சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

ஒத்தக்கடையில் சேகரமாகும் குப்பைகளை முறையாக அகற்றவும், அகற்றப்பட்ட குப்பைகளை ஊருக்கு வெளியே குப்பை கிடங்கு அமைத்து மறுசுழற்சி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் 20–க்கும் மேற்பட்டோர் ஒத்தக்கடை யானைமலை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே அழைத்தனர். ஆனால் அவர்கள் குப்பைகளை முழுவதும் அகற்றினால் தான் வருவோம் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராமர் குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார். அவரது அறிவுரையின்படி வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகாந்தி ஏற்பாட்டில் ஊராட்சி பணியாளர்கள் ஒத்தக்கடையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றினர். மேலும் தொடர்ந்து குப்பைகள் தேங்காதவாறு அவ்வவ்போது அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து மலை மீது ஏறி போராட்டம் நடத்தியவர்கள் கீழே இறங்கி வந்தனர்.

மேலும் செய்திகள்