பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றதை தடுத்ததால் போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த வேன் டிரைவர்

பழனியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றதை தடுத்ததால் போலீஸ் நிலையத்தில் வேன் டிரைவர் விஷம் குடித்தார்.

Update: 2019-02-13 21:30 GMT
பழனி,

பழனி டவுன் 3-வது வார்டு காரமடைபகுதியில் குடியிருப்பவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர், சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று மாலை அடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வேன் பழுதடைந்து விட்டது. இதனால் மாணவ-மாணவிகளை வீட்டுக்கு அழைத்து செல்ல பாலகிருஷ்ணனை பள்ளி நிர்வாகம் அழைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற பாலகிருஷ்ணன், மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு அடிவாரம் பூங்கா ரோட்டில் வேனில் வந்தார். அப்போது, பழனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வி வேனை மறித்து நிறுத்தினார். மேலும் மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்ல அனுமதியில்லை என்று கூறி வேனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

இதனால் பாலகிருஷ்ணன் ஆத்திரம் அடைந்தார். அவசர தேவைக்கு வேனை வாடகைக்கு கொண்டு வந்ததாகவும், தனது வேனுக்கான அனைத்து ஆவணங்களும் இருப்பதாக கூறினார். இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர், பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று வேன் டிரைவர் தன்னிடம் வாக்குவாதம் செய்தது குறித்து முறையிட்டார். இதுதொடர்பாக பால கிருஷ்ணனிடம், போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெளியே வந்த பாலகிருஷ்ணன், தனது வேனில் வைத்திருந்த எலி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்