கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு: கைது செய்யப்பட்டவர், கோர்ட்டில் ஆஜர் 28–ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு

கோவை அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலையை திருடியதாக கைது செய்யப்பட்டவர், கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 28–ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-02-14 23:00 GMT
கும்பகோணம்,

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் பட்டத்துஅரசி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 12–ந் தேதி இரவு இக்கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், அங்கிருந்த 2½ அடி உயரம் கொண்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய பட்டத்து அரசி அம்மன் ஐம்பொன்சிலை, தங்க நகை, கோவில் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து கோவில் செயல் அதிகாரி ரமேஷ்குமார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மருதாசலம் மகன் தண்டபாணி (வயது37) என்பவருக்கு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


அவரிடம் இருந்து ஐம்பொன் பட்டத்துஅரசி அம்மன் சிலையை போலீசார் மீட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தண்டபாணியை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி அய்யப்பன்பிள்ளை முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது தண்டபாணியை வருகிற 28–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக மீட்கப்பட்ட சிலையை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். அந்த சிலையை கோவில் செயல் அதிகாரி ரமேஷ்குமாரிடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்