தேனி அருகே துணிகரம், வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் திருட்டு

தேனி அருகே வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2019-02-15 22:15 GMT
தேனி,

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் வசிப்பவர் பாலகிருஷ்ணன் (வயது 34). இவர் தேனியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 13-ந்தேதி மாலையில் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தேனியில் உள்ள தனது தாயார் செல்வியின் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் இவருடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அதே பகுதியில் குடியிருக்கும் நபர் ஒருவர், பாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பாலகிருஷ்ணன் தனது வீட்டுக்கு விரைந்து சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்து இருந்த 6 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. பூட்டிய வீட்டை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்