கயத்தாறு அருகே சவலாப்பேரியில் துணை ராணுவவீரரின் உடலுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்

காஷ்மீரியில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த துணைராணுவ வீரரின் உடல் இன்று(சனிக்கிழமை) சொந்தஊரான சவலாப்பேரியில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-02-15 21:45 GMT
தூத்துக்குடி, 

காஷ்மீரியில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த துணைராணுவ வீரரின் உடல் இன்று(சனிக்கிழமை) சொந்தஊரான சவலாப்பேரியில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

சொந்த ஊருக்கு...

காஷ்மீர் மாநிலத்தில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்த மத்திய ராணுவ ஆயுதப்படை போலீசார் மீது கடந்த 14-ந்தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர் இழந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியனும் ஒருவர் ஆவார். இவரது உடல் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்தடைந்து அங்கு இருந்து வாகனத்தில் மதியம் 12 மணிக்கு, அவரின் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது.

வீரமரணம்

வீரமரணம் அடைந்த வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நான்( கலெக்டர் சந்தீப்நந்தூரி), போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் பலர் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளனர்.

வீரர் சுப்பிரமணியனின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் கருணை தொகையாக ரூ.20 லட்சம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார். அந்த தொகை அவரின் குடும்பத்துக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்