தாளவாடி அருகே ஆசனூரில் சக்கரம் உடைந்து கும்பேஸ்வரர் கோவில் தேர் சாய்ந்தது அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர்

தாளவாடி அருகே ஆசனூரில் சக்கரம் உடைந்து கும்பேஸ்வரர் கோவில் தேர் சாய்ந்தது. பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

Update: 2019-02-15 22:30 GMT

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூரில் பிரசித்தி பெற்ற கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று முன்தினம் அலங்கார பூஜையுடன் தொடங்கியது. நள்ளிரவு 2 மணியளவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

நேற்று காலை 6 மணியளவில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் முதலில் பூசாரிகள் இறங்கினர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கினர்.

மாலை 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் கும்பேஸ்வரர் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து ஆசனூர், ஓங்கல்வாடி, அரேபாளையம், மாவள்ளம், தேவர்நத்தம், கேர்மாளம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தது. வழிநெடுக பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர்.

வீதிகளில் பாதி தூரம் வந்த பின்னர் திடீரென தேரின் முன்பக்க சக்கரம் ஒன்று உடைந்தது. இதனால் நிலை தடுமாறிய தேர் அப்படியே சாய்ந்தது. தேர் இழுத்துக்கொண்டு இருந்த பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருவிழாவின்போது தேர் சாய்ந்ததால் தெய்வ குற்றம் ஆகிவிட்டதோ? என்று பக்தர்கள் கவலைப்பட்டார்கள்.

மேலும் செய்திகள்