பரமக்குடி அருகே அரசு பஸ்–டிப்பர் லாரி நேருக்குநேர் மோதல்– 10 பேர் படுகாயம்

பரமக்குடி அருகே அரசு பஸ்–டிப்பர் லாரி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் நிலை தடுமாறிய பஸ் சாலையோரத்தில் இருந்த வீட்டிற்கு புகுந்து நின்றது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-02-15 22:30 GMT

பரமக்குடி,

மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் தெளிச்சாத்தநல்லூர் அருகே வந்த போது பரமக்குடியில் இருந்து சென்ற டிப்பர் லாரியும் பஸ்சும் நேருக்குநேர் மோதின. இதில் நிலைதடுமாறிய அரசு பஸ் சாலையை விட்டு இறங்கி அருகில் இருந்த வீட்டுக்குள் புகுந்து நின்றது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பயந்து அலறினர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டதும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தது போலீசாரும், பொதுமக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனைவரையும் மீட்டனர்.

இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்த மதிபெருமாள்(வயது 50), கண்டக்டர் புதுமடத்தை சேர்ந்த காசிநாதன்(43) மற்றும் பயணிகள் பரமக்குடி பாரதிநகரை சேர்ந்த ஆதிமுத்து(50), எமனேசுவரத்தை சேர்ந்த மாலா(50), காடரந்தகுடியை சேர்ந்த நாகராஜ்(55), மேலமடையை சேர்ந்த சரண்யா(27), காட்டுப்பரமக்குடியை சேர்ந்த திலகா(48), பூமயில் (50) உள்பட 10–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக ராமநாதபுரம் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் அரசு பஸ் மோதிய வேகத்தில் வீட்டிற்குள் இருந்த கஸ்தூரி(57) என்பவர் வெளியே வரமுடியாமல் பரிதவித்தார். அதனை தொடர்ந்து மீட்பு படையினர் சுமார் அரை மணி நேரம் போராடி அவரை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து பரமக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்