டாஸ்மாக் கடைகளின் வருமானத்தை வங்கிகள் மூலம் வசூலிக்க வேண்டும் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

டாஸ்மாக் கடைகளில் தினசரி கிடைக்கும் வருமானத்தை வங்கிகள் மூலம் வசூலிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-02-15 22:57 GMT

திருமங்கலம்,

திருமங்கலத்தில் அரசு டாஸ்மாக் ஊழியர்கள் சங்க தென் மண்டல கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணவாளன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பாலுச்சாமி, பொதுச் செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் சங்கத்தின் மாநில தலைவர் பாலுச்சாமி கூறியதாவது:–

மாநிலம் முழுவதும் 5,500 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். 16 ஆண்டுகளாக பணிபுரியும் இவர்களின் மாத சம்பளம் ரூ.7,250 முதல் ரூ.10,250 வரை வழங்கப்படுகிறது. உபரியாக விற்பனை செய்யப்படும் பாட்டில்கள், அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு கடை வாடகை கட்டுதல், கூடுதலாக வரும் மின் கட்டனங்கள் செலுத்துதல், உயர் அதிகாரிகளின் செலவு உட்பட பல்வேறு வகையில் செலவு செய்யப்படுகிறது. இதுதவிர அரசியல் கட்சி அதிகாரம் படைத்தவர்கள் எனக்கூறி மொத்தமாக மது பாட்டில்களை எடுத்து வைத்து பாரில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க முடியவில்லை.

டாஸ்மாக் கடைகள் மூலம் தினசரி பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. தினமும் விற்பனை செய்யப்படும் பணத்தை, இரவு ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டு மறுநாள் வங்கிகளில் கட்டுகின்றனர். இரவு நேரங்களில் பணம் கொண்டு செல்லும் போது வழிப்பறி, கொள்ளை சம்பவத்தால் பணத்தை காப்பாற்ற முயன்று பலர் உயிரையும் விடும் சூழ்நிலை உள்ளது. இதற்காக அரசு எந்த விதமான உதவியும் செய்வது இல்லை. இந்த பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கும் எந்தவிதமான பலன்களும் இல்லை. சென்னை போன்ற நகரங்களில் விற்பனை முடியும் 1 மணி நேரத்திற்கு முன்பு வங்கிகளில் இருந்து வந்து பணத்தை பெற்றுச் செல்கின்றனர். இந்த நடைமுறை எல்லா இடத்திலும் செயல்படுத்த வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் முதல் வாரம் கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். மானிய கோரிக்கை நடைபெறும்போது 2 நாள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்