கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிக்கு ரூ.3 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிக்கு கிராம மக்கள் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

Update: 2019-02-16 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சேகல் தீவம்பாள்பட்டினம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, கஜா புயலால் பாதிக்கப்பட்டது. பள்ளியில் இருந்த பொருட்கள் புயலில் சேதம் அடைந்தன. இதையடுத்து கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்க முடிவு செய்தனர்.

அதன்படி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் எல்.இ.டி. டி.வி., 2 பீரோக்கள், மேஜைகள், புத்தகங்களை அடுக்கக்கூடிய அலமாரி, ஏணி, மின்விசிறி, ஒலிப்பெருக்கி சாதனங்கள், கெடிகாரங்கள், டியூப் லைட்டுகள், மாணவர்களுக்கு தேவையான எழுதுப்பொருட்கள், தேச தலைவர்கள் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், குடங்கள், எவர் சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மேள தாளம் முழங்க கிராம மக்கள் பள்ளிக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

மலர் தூவி வரவேற்பு

ஊர்வலம் பள்ளிக்கு வந்தபோது மாணவர்கள் மலர்தூவி கிராம மக்களை வரவேற்றனர். விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி அமுதாசெல்வக்குமார் தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் முருகையன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை பூங்குழலி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்