திண்டிவனம் அருகே கோர விபத்து பஸ்-வேன் மோதல்: உடல்நசுங்கி 2 தம்பதி பலி துக்கநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பரிதாபம்

திண்டிவனம் அருகே பஸ் மீது வேன் மோதிய விபத்தில் 2 தம்பதி பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 24 பேர் படுகாயமடைந்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2019-02-16 22:30 GMT
மயிலம்,

இந்த கோர விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் கருப்பையா மகன் அங்குசாமி(வயது 50). இவருடைய மனைவி லட்சுமி(48). அங்குசாமி தற்போது சென்னை நெற்குன்றம் மதுரவாயலில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அங்குசாமி காரைக்குடியில் உள்ள உறவினரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் அங்கிருந்து ஒரு வேனில் அனைவரும் சென்னைக்கு புறப்பட்டனர். இந்த வேனில் அங்குசாமி, லட்சுமி, இவர்களுடைய மகன் விக்னேஷ்வரன்(31), இவருடைய மனைவி ரேகா (28), குழந்தைகள் பவித்ரன்(4), நித்திஷ்(1½) மற்றும் உறவினர் சிவகங்கை மாவட்டம் கட்டாங்குளத்தை சேர்ந்த உமாபதி(35), இவருடைய மனைவி விஜயலட்சுமி(28) ஆகியோர் வந்தனர். வேனை அங்குசாமி ஓட்டிச் சென்றார்.

இந்த வேன், நேற்று அதிகாலை 3.45 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள விளங்கம்பாடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மறுமார்க்கமாக திருச்சி- சென்னை சாலையில் சென்றது. அப்போது அவ்வழியாக வந்த வேன் கண் இமைக்கும் நேரத்தில் பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ், வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் வேனில் வந்த அங்குசாமி, லட்சுமி, உமாபதி, விஜயலட்சுமி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் விக்னேஷ்வரன், ரேகா, பவித்ரன், நித்திஷ் மற்றும் பஸ் டிரைவர் திண்டுக்கல் வக்கரப்பட்டியை சேர்ந்த அருளானந்தன்(57), கண்டக்டர் குட்டத்துப்பட்டியை சேர்ந்த பிரபு(37), பஸ்சில் பயணம் செய்த விராலிப்பட்டியை சேர்ந்த சபீனா(23), சென்னை சோலிங்கநல்லூரை சேர்ந்த குமரவேல்(61), கரூரை சேர்ந்த நவீன்(25) உள்பட 24 பேர் காயமடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இந்த விபத்து பற்றி அறிந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்தனர். பின்னர் விபத்தில் பலியான அங்குசாமி, லட்சுமி, உமாபதி, விஜயலட்சுமி ஆகிய 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்