உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு தி.மு.க.வே காரணம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு தி.மு.க.வே காரணம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

Update: 2019-02-17 22:45 GMT
நிலக்கோட்டை,

நிலக்கோட்டையில் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கு காரணம் ‘அகிலம் வியந்த அஞ்சாமையா!அதிசயம் படைத்த ஆளுமையா! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதற்கு நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை தாங்கினார்.

அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளர் சேகர் ஆகியோர் வரவேற்று பேசினர். முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ், திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பட்டிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும், கழக கொள்கை பரப்பு செயலாளருமான வைகைச்செல்வன் நடுவராக செயல்பட்டார்.

முன்னதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை- எளிய மக்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதமும் வழங்க அரசு உத்தரவிட்டது. இதை பொறுத் துக்கொள்ள முடியாமல் முதல்-அமைச்சர் மீது வீண் அவதூறுகளை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார்.

உள்ளாட்சி தேர்தலை தள்ளி போடுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டை ஒரு போதும் ஏற்க முடியாது. உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு தி.மு.க.வே காரணம். சென்னையில் நடந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு வந்த ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். ஆனால் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த மாநாட்டில் ஏன் ராகுல் காந்தியை பற்றி ஒரு வரி கூட பேசவில்லை. மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக கடந்த 3 நாட்களாக பல்வேறு கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேருவதற்கு போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கத்துரை நிலக்கோட்டை தொகுதியில் அறிமுகமானவர் அல்ல. அவரை வெற்றி பெற செய்தது அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கம்.

தமிழகத்தில் போராட்டம் நடத்த ஆசிரியர்களை தூண்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின். இதை உணர்ந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் இடைத்தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான பெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்டிமன்றத்தில் ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் நல்லத்தம்பி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன், முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், அம்மையநாயக்கனூர் பேரூர் கழக முன்னாள் நகர தலைவர் காசிபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்