ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, திருமண கோஷ்டியினரின் கார் மீது பஸ் மோதல்- உடுமலை வாலிபர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற காரும் அரசு பஸ்சும் மோதிக்கொண்டதில் உடுமலையை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார். 10 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

Update: 2019-02-17 22:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை குமரன்வீதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் நரேந்திரனுக்கும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நேற்று காலை விருதுநகரில் திருமணம் நடந்தது. மாலையில் மணமக்கள் ராஜபாளையத்திலுள்ள மணமகளின் வீட்டுக்கு ஒரு காரில் புறப்பட்டனர். உறவினர்கள் மற்றொரு காரில் வந்தனர். அந்த காரில் மணமகனின் தம்பி நவீன்குமாரும்(வயது28) வந்தார். காரை மதுரையை சேர்ந்த ஜெயவீரபுத்திரன் (38) என்பவர் ஓட்டி வந்தார். அந்த கார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிவகாசி சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அரசு பஸ் சென்றது. எதிர்பாராதவிதமாக கார் மீது பஸ் மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த நவீன்குமார் (28) உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். மேலும் காரை ஓட்டி வந்த ஜெயவீரபுத்திரன், ராஜபாளையத்தை சேர்ந்த கணேசன்(52), விக்னேஸ்வரன்(32), ரேணுகா(46), தேவி(40), உமா ரத்தினம்(24), விருதுநகரை சேர்ந்த கோகிலா(17) உடுமலைபேட்டையை சேர்ந்த ரோகிணி(29) மற்றும் அவரது மகன்கள் சச்சின் குரு(7), அபினேஷ் குரு(4) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தார்கள். 10 பேரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் ராமநாதபுரம் பார்த்தீபனூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.

விபத்தில் இறந்த நவீன்குமார் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அண்ணனின் திருமணத்தை தொடர்ந்து 2 மாதத்தில் அவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்காக பெண் பார்த்து நிச்சயித்து இருந்தனர். இந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காரில் முன்னால் சென்று கொண்டிருந்த மணமக்கள் திரும்பி வந்தனர். பலியான நவீன்குமார் உடலைப்பார்த்து திருமண கோலத்தில் இருந்த மணமக்கள் கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. 

மேலும் செய்திகள்