கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நல உதவிகளை, கலெக்டர் வழங்கினார்

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நல உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

Update: 2019-02-18 22:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 187 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் பிரபாகர், அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து தாட்கோ சார்பில் தேசிய துப்புரவு பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலம் கிருஷ்ணகிரியை சேர்ந்த மூர்த்தி, நாகராஜன், மோகன், ரகு, கிருஷ்ணன், சுகுணா, முருகன் ஆகியோருக்கு தையல், டெக்ஸ்டைல்ஸ், பிளோர் மில் ஆகிய தொழில் கள் மேற்கொள்ள பருவ கடனாக மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

நெடுங்கல் கிராமத்தை சேர்ந்த முருகம்மா- செல்வராஜ் ஆகியோரின் 13 வயது மகள் மணிஷா முதுகுதண்டு வட பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதல்-அமைச்சர் விரிவான காப்பீடு திட்ட ஸ்மார்ட் கார்டு வேண்டி மனு கொடுத்திருந்தார். அவருக்கு உடனடியாக காப்பீடு திட்ட ஸ்மார்ட் கார்டு மற்றும் சிகிச்சைக்காக மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலையும், எக்கூர் கிராமத்தை சேர்ந்த நாச்சியம்மாள் என்பவருக்கு மருத்துவ செலவிற்கான நிதி உதவியாக ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலையும், கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த பிரதீஸ்வரன் என்பவருக்கு ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலையும், எக்கூர் கிராமத்தை சேர்ந்த முரளி என்பவருக்கு ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலையும், என 4 பயனாளிகளுக்கு ரூ.40 ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன், தாட்கோ மாவட்ட மேலாளர் (பொறுப்பு) ராஜகுரு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், உதவி ஆணையர் (ஆயம்) முரளி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்