ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்ககோரி மனு கொடுக்கும் போராட்டம்

ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்ககோரி இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-18 23:00 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை நகர மற்றும் ஊராட்சிப் பகுதியில் வறுமைக் கோடு பட்டியலில் விடுபட்டவர்களை உடனே அந்த பட்டியலில் சேர்க்கவேண்டும். ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கவேண்டுமெனக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் முன்னிலை வகித்தார்.

குளித்தலை காந்திசிலை முன்பு போராட்டம் குறித்து விளக்கி பேசப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்கள் கோட்டாட்சியர் அலுவலக அதிகாரியிடம் தங்களது மனுக்களை அளித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் தங்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இணைத்து அரசின் சிறப்பு நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தனித்தனி மனுவாக அளித்தனர். இந்த போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராம மக்கள், லாலாபேட்டை பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்