கொடுமுடியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கொடுமுடி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-02-18 22:08 GMT

கொடுமுடி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். பழுப்பு நிறத்தில் கட்டம் போட்ட பனியனும், வேட்டியும் அணிந்திருந்தார். யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் சொரனூரை சேர்ந்த மோகன்தாஸ். அவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு அலியாத்தி, மீது ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கீதா கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகள்களுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

மோகன்தாஸ் திருச்சியில் சமையல் வேலையை முடித்துவிட்டு திருச்சி–கோவை ரெயிலில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது ரெயிலின் படிக்கட்டில் உட்கார்ந்து அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக அவர் ரெயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்’ என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கேரளாவில் உள்ள மோகன்தாசின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்