கடலூர் கே.என்.பேட்டையில் மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ.1 லட்சம் நகைகள் திருட்டு

கடலூர் கே.என்.பேட்டையில் மளிகை கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2019-02-19 22:30 GMT
கடலூர்,

கடலூர் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் வைத்தியநாதன்(வயது 35). இவர் திருவந்திபுரம் மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் காலையில் தனது வீட்டை பூட்டி விட்டு கடைக்கு வந்து விட்டார். அவரது மனைவியும் வெளியில் சென்று விட்டார்.

மதியம் 1.30 மணி அளவில் வைத்தியநாதன் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றார். அவர் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற போது, பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார்.

அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் நாலாபுறமும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த மோதிரம், செயின், கம்மல் உள்பட 8 பவுன் நகைகளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். ஆள் இல்லாத நேரத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.

இது பற்றி வைத்தியநாதன் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்