நூறு நாள் திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் மறியல்

குறைவான நாள் வேலை பார்த்த மக்கள் முறையாக வேலை வழங்கவேண்டும் என கூறி நேற்று காசங்கோட்டை-ஸ்ரீபுரந்தான் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-20 22:45 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் புதுப்பாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வார்டு வாரியாக நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதாக கூறப்படுகிறது. ஊராட்சி செயலாளர் ஒரு வார்டுக்கு அதிக நாள் வேலை தருவதாகவும், மற்றொரு வார்டு மக்களுக்கு குறைவான நாள் வேலை தருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குறைவான நாள் வேலை பார்த்த மக்கள் முறையாக வேலை வழங்கவேண்டும் என கூறி நேற்று காசங்கோட்டை-ஸ்ரீபுரந்தான் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து, கிராமத்தின் பொதுவான இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் கூறி முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காசங்கோட்டை-ஸ்ரீபுரந்தான் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்