விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தபோது விவசாயி தப்பி ஓட்டம்

கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய விவசாயியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்த போது தப்பி ஓடினார்.

Update: 2019-02-20 22:15 GMT
கந்தர்வகோட்டை,

கந்தர்வகோட்டையை அடுத்துள்ள மட்டங்கால் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). விவசாயி. இவர் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலினால் தனது வீடு பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அரசின் நிவாரண உதவி கேட்டும் விண்ணப்பித்திருந்தார். ஆனால் பல நாட்கள் ஆகியும் நிவாரணம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இது சம்பந்தமாக விசாரிக்க நடராஜன் நேற்று மாலை 5 மணி அளவில் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கிராம நிர்வாக உதவியாளர் துரையிடம் தாசில்தாரை நேரில் பார்க்க வேண்டும் என்றும், தனக்கு ஏன் நிவாரணம் வழங்காமல் காலதாமதம் செய்கிறீர்கள் என்றும் நடராஜன் கேட்டுள்ளார். அப்போது கிராம நிர்வாக உதவியாளர் துரை அலுவலகத்தில் அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறுகின்றது. சிறிது நேரம் கழித்து வாருங்கள் பார்க்கலாம் என்று கூறி உள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக உதவியாளர் துரை கந்தர்வகோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நடராஜனை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது நடராஜன் டீ குடித்து வருவதாக கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து தப்பி ஓடிய நடராஜனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்