நிர்மலாதேவி விவகாரம்: ‘‘என் மீதான பொய் வழக்கை சட்டப்படி சந்திப்பேன்’’ ஜாமீனில் விடுதலையான பேராசிரியர் முருகன் பேட்டி

நிர்மலாதேவி விவகாரத்தில் சிக்கிய பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமீனில் நேற்று விடுதலையானார்கள். இந்த நிலையில் தன் மீதான வழக்கு பொய்யானது என்றும், அதனை சட்டப்படி சந்திப்பேன் எனவும் முருகன் கூறினார்.

Update: 2019-02-20 23:30 GMT

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அவருடன் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் நிராகரிக்கப்பட்டன.

இதனையடுத்து முருகன், கருப்பசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து 2 பேருக்கும் ஜாமீன் வழங்கி கடந்த 12–ந் தேதி உத்தரவிட்டது. நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதான வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த கோர்ட்டில் நேற்று முன்தினம் ஜாமீன் உத்தரவு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அது குறித்து மகளிர் கோர்ட்டு நீதிபதி(பொறுப்பு) சாய்பிரியா விசாரித்து, முருகன், கருப்பசாமி ஆகியோரை ஜாமீனில் வெளியே விட அனுமதித்தார். அந்த உத்தரவு சிறை அதிகாரிகளிடம் முறைப்படி வழங்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலையில் சிறையில் இருந்து முருகன், கருப்பசாமி ஆகியோர் வெளியே வந்தனர்.

9 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அவர்களை உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் உதவி பேராசிரியர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை சட்டப்படி சந்திப்பேன். தற்போது வழக்கு கோர்ட்டில் இருப்பதால் இதை தவிர வேறு எதையும் என்னால் கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரும், கருப்பசாமியும் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்