தென்பெண்ணை ஆற்று பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தல் வாலிபர் கைது

தென்பெண்ணை ஆற்று பகுதியில் நூதன முறையில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய வாலிபரை கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-02-20 22:30 GMT

பாகூர்,

புதுவை மாநிலம் பாகூரை அடுத்த சோரியாங்குப்பம்,மற்றும் குருவிநத்தம் பகுதியில் அமைந்துள்ள தென்பெண்னை ஆற்றில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிப்பர் லாரிகள் மூலமாக மணல் திருடப்பட்டு வந்தது. இந்த மணல் திருட்டை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அதன் காரணமாக ஓரளவு மணல் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவர்னர் கிரண்பெடி பாகூர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.அப்போது மணல் கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டும் எனவும், மணல் கடத்தல் வழக்கு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து மணல் கடத்தலை தடுக்க சோரியாங்குப்பம், குருவி நத்தம், கொம்மந்தான்மேடு, சித்தேரி அணைக்கட்டு ஆகிய 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.நேற்று முன்தினம் சோரியாங்குப்பம் போலீசார் தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சிலர் தண்ணீரில் மூழ்கி மணல் அள்ளி வந்து அதனை இருசக்கரவாகனத்தில் நூதனமுறையில் சாக்கு மூட்டைகளில் கட்டி கடத்த முயன்றனர்.

போலீசார் வருவதை கண்ட அவர்கள் சாக்கு மூட்டைகளை கீழே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவர் போலீசாரின் பிடியில் சிக்கினார். மேலும் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது சோரியாங்குப்பம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வதுரை(வயது25) என்பவர் கடத்தியது தெரியவந்தது. அவர் மீது கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்