முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28-ந் தேதி ஈரோடு வருகை ரூ.58½கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்

ஈரோட்டுக்கு 28-ந் தேதி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.58½கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.

Update: 2019-02-21 23:15 GMT
ஈரோடு, 

ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய மேம்பாலம் கட்ட ரூ.58½ கோடி நிதி ஒதுக்கினார்.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடந்தது. பிரப் ரோட்டில் இருந்து பெருந்துறை ரோடு செல்லும் வகையிலும், ரவுண்டான பகுதியில் இருந்து ஈ.வி.என்.ரோடு செல்லும் வகையிலும் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

தற்போது இந்த பாலத்தின் பணிகள் முழுமை அடைந்து வருகிற 28-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக நடக்கும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் ஈரோடு சி.எஸ்.ஐ. பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் தொடங்கி வைத்து பேசுகிறார்.

இதற்கான பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அரசு விழா நடைபெறும் சி.எஸ்.ஐ. பள்ளிக்கூட மைதானத்தையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

அப்போது அமைச்சர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, ஈரோடு செல்வகுமார சின்னையன் எம்.பி., அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீஷ், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்