தமிழ்மொழி உயிரோடும், உணர்வோடும் கலந்திருக்கிறது தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

தமிழ்மொழி உயிரோடும், உணர்வோடும் கலந்திருக்கிறது என தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தர் கோ.பாலசுப்ர மணியன் கூறினார்.

Update: 2019-02-21 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் உலக தாய்மொழி நாள் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தர் கோ. பாலசுப்ரமணியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எத்தனை மொழிகள் தெரிந்து வைத்திருந்தாலும் நமது தாய்மொழியான தமிழ் மொழி தான் உயிரோடும், உணர்வோடும் கலந்திருக்கிறது. மாற்றாரும் போற்றக்கூடிய இயக்கிய மரபு உடைய மொழி தமிழ். நாம் மெச்சிக்கொள்ளும் வகையில் நாம் தமிழைப் பயன்படுத்தவில்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆங்கிலத்தில் பேசுவது, ஆங்கிலம் கலந்து பேசுவது தான் மதிப்பு மிகுந்தது என்று பலர் நினைத்து கொண்டுள்ளனர்.

படித்தவர்கள், அலுவலகங்களில் பணிபுரிவோர், படித்து விட்டு பல்வேறு தொழில்களை செய்வோர் பொதுமக்களிடம் பேசும் போது பல ஆங்கில சொற்களை கலந்து பேசுகிறார்கள். படித்தவர்கள் இந்த மனப்பான்மையை மாற்றிக்கொண்டால் பொதுமக்களும் மாறுவார்கள். தமிழில் பேசுவதை பெருமையாக நினைத்து கொள்வோம்.

ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும் ஒரு மொழி இந்த உலகத்தில் இருந்து காணாமல் போவதாக கூறப்படுகிறது. 40 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் தங்களுடைய தாய்மொழியில் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொருண்மையை வைத்து தான் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மண்ணின் மொழிகளுக்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. அந்த மொழிகள் எல்லாம் காக்கப்பட வேண்டும்.

பிற பண்பாட்டையும், பிறமொழி பேசுகின்ற மக்களையும் மதிக்கத் தெரிய வேண்டும். இந்த உலகில் எல்லா உயிர்களும் வாழ்வதற்கு உரிமை உண்டு. இதுபோல எல்லா மொழிகளுக்கும், எல்லாப் பண்பாட்டுக்கும் இடம் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உரிய இடத்தை வழங்கி அவர்கள் மொழிகளை பேசுவதற்கும் ஊக்கம் அளித்து பன்மொழிச்சூழலை பாதுகாக்கப்பட வேண்டும். இயன்ற இடங்களில் எல்லாம் தமிழைப் பயன்படுத்துவோம். ஆங்கிலம் கலப்பின்றி பேசுவோம் என்று உறுதி மொழியை அனைவரும் எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் புலவர் செந்தலை ந.கவுதமன், மொழிப்புலத்தலைவர் கவிதா ஆகியோர் பேசினர். முன்னதாக இலக்கியத்துறை பேராசிரியர் பெ.இளையாப்பிள்ளை வரவேற்றார். முடிவில் இணைப்பேராசிரியர் ரா. வெங்கடேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்