திருச்சி அருகே சிறை காவலர் மீது தாக்குதல்-கார் கண்ணாடி உடைப்பு 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

திருச்சி அருகே சிறை காவலரை தாக்கியதுடன் அவரது கார் கண்ணாடியை உடைத்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.

Update: 2019-02-21 22:15 GMT
லால்குடி,

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மகளிர் சிறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கருப்பையா. அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அரியலூருக்கு தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் கார் சென்றபோது, லால்குடி மலையப்பபுரத்தை சேர்ந்த வாலிபர்கள் 3 பேர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், கருப்பையாவின் கார் மீது உரசியது. இதுதொடர்பாக கருப்பையாவுக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர்கள் கருப்பையாவை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனால், கோபமடைந்த கருப்பையா, வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை காரில் விரட்டிச் சென்றார். இதை கவனித்த வாலிபர்கள் தங்களது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், 7-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மலையப்புரம் பகுதியில் காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் கீழே கிடந்த கல்லை எடுத்து காரின் கண்ணாடியை உடைத்தனர். கருப்பையா காரை விட்டு கீழே இறங்கியதும் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த கருப்பையாவை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கருப்பையா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்