பிரசவத்தில் இறந்து பிறந்த பெண் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனை வளாகத்தில் வீச்சு

பிரவத்தின்போது இறந்து பிறந்த பெண் குழந்தையின் உடல் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் வீசப்பட்டது. அதன் தாய் தப்பியோடியதாக கிடைத்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-21 22:15 GMT
திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் பிரிவு வார்டை அடுத்துள்ள பெரியார் சிலையின் அருகே நேற்று மாலை ஒரு பெண் குழந்தையின் உடல் துணியால் சுற்றப்பட்டு கிடந்ததை அங்கிருந்தவர்கள் கண்டனர். இது குறித்து உடனடியாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் பிரசவ வார்டில் நேற்று முன்தினம் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவத்தில் பெண் குழந்தை இறந்தே பிறந்ததும், அவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியதாகவும் மருத்துவமனை போலீஸ் நிலையத்திற்கு, பிரசவ வார்டில் இருந்து டாக்டர் ஒருவர் கையெழுத்திட்ட சீட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சமயபுரத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை இறந்தே பிறந்ததும், குழந்தையின் உடலை அவரது உறவினரான ஒரு பெண்ணிடம் மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்ததாகவும், அவர் குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று புதைக்காமல், மருத்துவமனை வளாகத்திலேயே வீசிச்சென்றதும் தெரியவந்தது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டதும், வேறு ஒரு ஆணுடன் கள்ள உறவினால் அந்த குழந்தை உருவானதும் தெரிந்தது. இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய், தப்பியோடி விட்டதாக டாக்டர் அளித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்