நகை, பணம் திருடியதாக போலீசில் பிடித்து கொடுத்த வாலிபர் தப்பி ஓட்டம்

ஆனைமலையில் நகை, பணம் திருடியதாக போலீசில் பிடித்து கொடுத்த வாலிபர் தப்பி ஓடினார்.

Update: 2019-02-21 22:30 GMT
ஆனைமலை,

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக்காண வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதில் ஈரோட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது நண்பர்களுடன் ஒரு வேனில் வந்திருந்தனர். இதில் 11 பேர் பெண்கள் ஆவர். இந்த பெண்கள் நேற்று காலை கோவில் அருகே உள்ள ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர், அவர்களையே நோட்டமிட்டுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அந்த பெண்கள் தங்களது நகை, பணத்தை பாதுகாப்புக்காக ஒரு பையில் போட்டு வைத்திருந்தனர். திடீரென அந்த வாலிபர் அந்த பையை திருடிக்கொண்டு தப்பியோடினார். உடனே பெண்கள் கூச்சலிட்டனர்.

இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர், அந்த வாலிபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரிடம் இருந்த நகை, பணம் அடங்கிய பையை பறிமுதல் செய்து பெண்களிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க கொண்டு சென்றனர்.

போலீஸ் நிலையத்திற்கு வந்ததும், அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது அந்த வாலிபரை அழைத்து சென்றவர்கள் நடந்த சம்பவத்தை கூறினர். அந்த வாலிபர் பெண்களிடம் நகை, பணத்தை திருடியபோது பிடித்து கொண்டுவந்ததாக கூறினார்கள். இந்த நிலையில் அந்த வாலிபரை, அங்குள்ள அறையில் ஒரு ஓரத்தில் உட்காரும்படி சப்-இன்ஸ்பெக்டர் கூறினார்.

அந்த வாலிபரும் அங்கு அமர்ந்தார். இந்த நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பியோடினார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்