கணவரை, வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி

கணவரை வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து பெண் தாக்கப்பட்டார். அதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-02-21 23:00 GMT
அரியாங்குப்பம்,

ஏம்பலம் புதுநகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 34), இவருடைய கணவர் பாலகிருஷ்ணன். இந்த நிலையில் மகேஸ்வரி தனது கணவரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்க அரியாங்குப்பம் சாமிநாயக்கர் வீதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ரூ.3 லட்சம் கொடுத்தார். ஆனால் செல்வராஜ் பணத்தை பெற்றுக்கொண்டு மகேஸ்வரியின் கணவரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கவில்லை. அதற்காக அவர் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த மகேஸ்வரி சம்பவத்தன்று செல்வராஜிடம் சென்று தான்கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்க செல்வராஜ் மறுத்து விட்டார். அது குறித்து மகேஸ்வரி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் மகேஸ்வரி மற்றும் செல்வராஜ் தரப்பினரை போலீஸ்நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார்கள். அதற்காக அவர்கள் வந்தபோது போலீஸ் நிலையத்துக்கு வெளியே இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மகேஸ்வரிக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் தரப்பினரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்