ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-02-22 22:30 GMT
தேனி,

உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாடிவாசல், விழா மேடை, பார்வையாளர் மேடை, பரிசுப் பொருட்கள் வைக்கும் இடம், மாடுகளை பரிசோதனை செய்யும் இடம், ஜல்லிக்கட்டு நடக்கும் களம், களத்தை சுற்றிலும் தடுப்பு வலை, மருத்துவ முகாம் அமைக்கும் இடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி, குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசித்து அறிவுரைகள் வழங்கினார்.

ஆய்வு குறித்து கலெக்டர் கூறுகையில், ‘மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தி களத்துக்குள் அனுமதிக்கப்பட்ட பின்பு வெளியே செல்ல அனுமதி வழங்க கூடாது. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்க முக்கிய டாக்டர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு வசதி, நிழற்பந்தல், குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் குழுக்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்.

ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் தென்னரசு, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சரஸ்வதி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்