பவானி ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பவானி ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2019-02-22 23:30 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். பகல் 11 மணிக்கு விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:–

பவானிசாகர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 700 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது. குடிநீருக்காக தினந்தோறும் 200 கன அடி தண்ணீர் திறந்துவிட்டாலே போதுமானது ஆகும். ஆனால் 700 கன அடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் ஆலைகள், நீரேற்று பாசனதாரர்கள் தண்ணீரை திருட வழிவகுத்து உள்ளது. எனவே பவானி ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஈரோடு மாநகருக்கு ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிநீர் வழங்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் ஊராட்சிக்கோட்டைக்கு கீழ் பகுதியில் உள்ள காவரி ஆறு சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை தான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட மக்கள் குடிக்கின்றனர். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய, காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்.

பவானிசாகர் அணையில் தற்போது 16.5 டி.எம்.சி. தண்ணீர் தான் உள்ளது. அணையின் பாசன திட்டங்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 30–ந் தேதி வரை தண்ணீர் விட வேண்டிய சூழ்நிலை உள்ளதால், பாசனத்துக்கு முறைவைத்து தண்ணீர் திறக்கவேண்டும். பவானிசாகர் அணைக்கு மேல் மற்றும் கீழ் உள்ள 20 வருவாய் கிராமங்களில் 30–க்கும் மேற்பட்ட இடங்களில் காகித ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளின் கழிவுகள் பவானி ஆற்றில் தான் கலக்கின்றன. இதனால் தண்ணீர் படிப்படியாக மாசடைந்து வருகிறது. பவானி ஆற்றில் இருந்து குடிநீருக்காக பல இடங்களில் தண்ணீர் எடுக்கப்படும் நிலையில், தண்ணீர் மாசுபடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் வசூல் என்ற பெயரில் முகவர்களை விவசாயிகள் வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இந்த முகவர்கள் விவசாயிகளையும், வீட்டில் உள்ள பெண்களையும் தரக்குறைவாக பேசுகின்றனர். வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில் கடன் வசூலை தள்ளிவைக்க வைக்க வேண்டும். பயிர்காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்ட வங்கியின் மூலம் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை நிவாரண தொகை கிடைக்கவில்லை. பவானி, ஆப்பக்கூடல் பகுதியில் சூறாவளிக்காற்றினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் சேதமடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

வாணிப்புத்தூர், அத்தாணி பகுதிகளில் 43 கல் குவாரிகள் ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கல் குவாரிகள் செயல்பட தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ள நிலையில் எந்த அடிப்படையில் ஏல அறிவிப்பு வெளியானது என்பதை தெரிவிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மானியக்கடன் பெற்று நிலம் வாங்கி, ஆழ்துளை கிணறு அமைத்துள்ள 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய மின் இணைப்பு கிடைக்காமல் உள்ளனர். இதனால் விவசாயிகள், தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின் மோட்டார்கள் பயன்பாடு இல்லாமல் கிடக்கின்றன. இந்த திட்டத்தில் மானியக்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் உள்ள வாரச்சந்தைகளில் சுங்கம் வசூலிக்க வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் சந்தைக்கான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலை ஓரத்தில் தான் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சந்தை உள்ள இடங்களில் எந்த விதமான கட்டமைப்பு வசதியும் இல்லை. எனவே சுங்க வசூல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் கிராமத்திலேயே தங்க வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. ஆனால் பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் அருகில் உள்ள சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து தினமும் வந்து செல்கின்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை கலெக்டர் அளிக்க வேண்டும்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை கிராமங்களில் சில விவசாயிகளுக்கு மட்டுமே வந்துள்ளது. தகுதியான பலருக்கும் இந்த அடையாள அட்டை வரவில்லை. இந்த அட்டை எப்போது வரும் என்பதை தெரிவிக்க வேண்டும். கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பல இடங்களில் பால் பணம் நிலுவையில் உள்ளது. மாதம்தோறும் பால் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினார்கள்.

அதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பேசும்போது, ‘உண்மையாகவே விவசாய தேவைக்காக கடன் வாங்கி இருந்தால், அந்த விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசு வழங்கும் சிறு, குறு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை போன்றவற்றை கடனுக்காக பிடித்தம் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் விவசாயிகள் திருப்பிச்செலுத்தும் திறனை அறிந்து கடன் வழங்க வேண்டும்.

காப்பீட்டு திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிவாரண உதவித்தொகை கிடைக்காதது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடம் பேசி விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சூறாவளிக்காற்றினால் பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களில் வருவாய் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விரைவில் கள ஆய்வு செய்வார்கள். அந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி நிவாரணம் கோரப்படும். கல் குவாரி டெண்டர் குறித்து கனிம வளத்துறை அதிகாரிகளிடம் விவரம் கோரி தகவல் தெரிவிக்கப்படும்’ என்றார்.

அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்