கொடுமுடி அருகே துணிகரம் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 5 பவுன் தாலிசங்கிலி பறிப்பு

கொடுமுடி அருகே மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 5 பவுன் தாலிசங்கிலியை துணிகரமாக பறித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-22 21:52 GMT

கொடுமுடி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சுமைதாங்கிபுதூரை சேர்ந்தவர் பிரியா (வயது 40). இவர் சாலைப்புதூர் அண்ணாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தினமும் பள்ளிக்கு மொபட்டில் சென்று வருவார். அதேபோல் நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மர்மநபர்கள் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு வயது சுமார் 20 முதல் 25 இருக்கும்.

பள்ளி அருகே உள்ள வாய்க்கால்மேடு என்ற இடத்தில் சென்றபோது 2 பேரும் பிரியாவின் மொபட்டை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த தாலிசங்கிலியை இழுத்து பறிக்க முயன்றனர். இதில் கீழே விழுந்த பிரியா ‘‘திருடன், திருடன்’’ என்று சத்தம் போட்டார். மேலும் சுதாரித்துக்கொண்டு தனது தாலிசங்கிலியை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் 2 பேரும் விடவில்லை. தொடர்ந்து தாலியை பிடித்து இழுத்தனர். இதில் தாலிசங்கிலி மட்டும் அவர்களது கையில் சிக்கியது. மாங்கல்யம் பிரியாவின் கைக்கு சென்றது. இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த மர்ம நபர்கள் 2 பேரும், மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பித்து சென்றனர். பறிபோன தாலிசங்கிலி 5 பவுன் ஆகும்.

இதுகுறித்து பிரியா கொடுமுடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்