ஆத்தூர் அருகே 3-வது மனைவியை அடித்து கொலை செய்த விவசாயி கைது போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்

ஆத்தூர் அருகே 3-வது மனைவியை அடித்து கொலை செய்த விவசாயி கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-02-23 22:00 GMT
ஆத்தூர், 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் (வயது 60). இவர் சேலம் - ஆத்தூர் மெயின் ரோட்டில் ஒரு விவசாய நிலத்தில் விவசாய கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மூன்றாவது மனைவி சுமதி (40). இவரும் அதே விவசாய நிலத்தில் பால் மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 21-ந் தேதி அதிகாலை சுமதி பால் கறந்து கொண்டிருந்தபோது தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுமதியை அவரது கணவர் சிங்காரம் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய சிங்காரத்தை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சிங்காரம் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

நான் விவசாய நிலத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வேலைக்கு வரும் மற்ற ஆண்களுடன் சுமதி சகஜமாக சிரித்து பேசி வந்தாள். இதுகுறித்து நான் கேட்டபோது அப்படிதான் நான் பேசுவேன் என கூறினாள். மேலும் எனக்கு சரியாக உணவு தராமல் என்னை அசிங்கமாக பேசி வந்தாள். மேலும் அவளுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதால் என்னிடம் இப்படி பேசுகிறாள் என்று நினைத்து அவளுடன் தினமும் சண்டை போட்டு வந்தேன்.

அதற்கு அவள் அப்படித்தான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன். உன்னால் முடிந்ததை பார் என சவால் விட்டாள். இதனால் ஆத்திரமடைந்த நான், சுமதி பால் கறந்துகொண்டிருந்தபோது செங்கல் மற்றும் உருட்டுக்கட்டையால் தலையில் பலமாக தாக்கினேன். இதில் அதே இடத்திலேயே சுமதி இறந்தாள். உடனடியாக நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து கைது செய்து விட்டனர். இவ்வாறு சிங்காரம் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சிங்காரத்திடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்