வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் கிராமம், நகர்ப்புற ஏழைகள் ரூ.2 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் கிராமம், நகர்ப்புற ஏழைகள் ரூ.2 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-02-23 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் கிராம ஊராட்சி அளவில் மற்றும் நகர்ப்புறங்களில் பயனாளிகளை கண்டறிய கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான குடும்பங்களை சார்ந்தவர்கள் தங்களுடைய குடும்ப விவரங்களை அதற்கென உரிய விண்ணப்பத்தினை www.tnrd.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ஊரக பகுதிகள் எனில் கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நகர்ப்புறம் எனில் நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் தங்களது ஆதார் எண், ஸ்மார்ட் கார்டு எண், வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி. மற்றும் அலைபேசி எண்் ஆகியற்றுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே ஊராட்சிகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட நபர்கள் மற்றும் ஏ.ஏ.ஓய். திட்டத்தின் கீழ் பயனடைபவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உள்ள ஏழை தொழிலாளர்கள் தமிழக அரசின் ஒரு முறை சிறப்பு நிதி உதவி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்