நெல்லை மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய தகவல் சேகரிப்பு பணி இன்று தொடங்குகிறது

நெல்லை மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய தகவல் சேகரிப்பு பணி இன்று தொடங்குகிறது.

Update: 2019-02-23 21:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு, குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு நிதி உதவி வழங்குவதற்காக ஊரகப்பகுதிகளை பொறுத்தவரை மக்கள் நிலை ஆய்வு கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்ட ஏழை மற்றும் மிகவும் ஏழை தொழிலாளர்கள், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் அந்தியோதயா அன்ன யோஜனா பயனாளிகள், நகர்ப்புற பகுதிகளில் வாழும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் பெயர் உள்ளவர்கள், சாலையோர கடை வைத்திருப்போர் மற்றும் ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த பட்டியலில் விடுபட்ட குடும்பங்களின் பெயரை பட்டியலில் சேர்த்திட கூடுதல் விவரம் சேகரிக்க 4 பக்க விண்ணப்ப படிவம் அரசால் வழங்கப்பட்டு உள்ளது. விண்ணப்பப் படிவங்களை www.tnrd.gov.in என்ற இணையதள முகவரியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்பத்தினை கிராமப்புற பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், நகர்ப்புறங்களுக்கு மாநகராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வசிப்போர், மாநகராட்சி 55 வார்டு அலுவலகங்களிலும், நகராட்சி பகுதிகளில் வசிப்போர் நகராட்சி பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் வசிப்போர் பேரூராட்சி அலுவலகங்களிலும் வழங்கிட வேண்டும்.

கிராமப்புற ஊராட்சி பகுதிகளில் வசிப்போர் தொடர்புடைய ஊராட்சி அலுவலகம், குக்கிராமங்களில் இயங்கும் அரசு அலுவலக கட்டிடங்களில் செயல்படும் சிறப்பு முகாம்களில் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, வங்கி புத்தக நகலுடன் இந்த பணிக்கு ஒதுக்கப்பட்ட களப்பணியாளர்களிடம் நேரிடையாக ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து தனி நபரிடமோ அல்லது வெளியாட்களிடமோ ஒப்படைக்க வேண்டாம் என்பதும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை தகவல் சேகரிப்பு பணி நடைபெறும். அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், அரசிற்கு வருமானவரி மற்றும் தொழில் வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்