மதுரையில் இருந்து சென்னை சென்ற போது ரெயிலில் இருந்து தவறிவிழுந்து ரெயில்வே என்ஜினீயர் சாவு

மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் திருச்சி அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து ரெயில்வே என்ஜினீயர் பரிதாபமாக இறந்துபோனார்.

Update: 2019-02-23 23:43 GMT
மதுரை,

மதுரையை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்(வயது 34). இவர் மதுரை ரெயில்வேயில் முதுநிலை என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் நடக்க இருந்த அலுவலகப்பணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள கடந்த 21-ந் தேதி மதுரையில் இருந்து மகால் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வ.எண்.22624) சென்னைக்கு பயணம் செய்தார்.

ஆனால் 22-ந் தேதி காலை அவர் சென்னை சென்று சேர்ந்த தகவல் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. மேலும், அவரது செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோதும் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் சவுந்திரபாண்டியன் இருக்கும் இடத்தை தேடி பார்த்தனர். அதில், அவரது செல்போன் சிக்னல் திருச்சி அருகே பூங்குடிக்கும், இனாம்குளத்தூருக்கும் இடையே காண்பித்துள்ளது. இதையடுத்து, திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை தேடி பார்த்தபோது, இனாம்குளத்தூர் அருகே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் ஒரு புதருக்குள் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என ரெயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இவருக்கு பத்மப்பிரியா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அத்துடன், அவரது மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.

சவுந்திரபாண்டியனின் தந்தை ரெயில்வே துறையில் வேலைபார்த்து பணியின் போது இறந்து போனார். அதனை தொடர்ந்து வாரிசு அடிப்படையில் கடந்த 2010-ம் ஆண்டு இவர் ரெயில்வே துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வேலைபார்த்த அவர் கடைசியாக காரைக்குடியில் வேலைபார்த்து வந்தார்.

கடந்த நவம்பர் மாதம் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்துக்கு பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், ரெயிலில் இருந்து கீழே விழுந்து இறந்து போன சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் ரெயில்வே வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்