ரஷியா அருகே, நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்கள்: மதுக்கூர் என்ஜினீயரின் நிலையை அறிய முடியாமல் தவிக்கும் பெற்றோர்

ரஷியா அருகே, நடுக்கடலில் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் சிக்கிய மதுக்கூரை சேர்ந்த என்ஜினீயரின் நிலையை அறிய முடியாமல் தவித்து வரும் அவருடைய பெற்றோரும், கிராம மக்களும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2019-02-24 22:45 GMT
மதுக்கூர்,

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தசேகர். இவருடைய மகன் அவினாஸ் (வயது23). ஆனந்தசேகர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். மரைன் என்ஜினீயரான அவினாஸ் மும்பையில் உள்ள சரக்கு கப்பல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த ஆண்டு(டிசம்பர்) மாதம் 17-ந் தேதி மும்பையில் இருந்து துருக்கி நாட்டுக்கு புறப்பட்டு சென்ற கப்பலில் பணியில் இருந்தார். அந்த கப்பல் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி ரஷியா அருகே கெர்ச் ஜலசந்தி பகுதியில் உள்ள தீவு அருகே பயணித்து கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலுக்கும், மற்றொரு கப்பலுக்கும் இடையே எரிபொருளை பரிமாற்றம் செய்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது.

இந்த தீ விபத்தில் 2 கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். ஆனால் அவினாசின் நிலைமை என்ன ஆனது? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் அவினாசின் நிலைமை குறித்த விவரங்கள் அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை.

இதன் காரணமாக அவருடைய பெற்றோர், உறவினர்கள் மற்றும் மதுக்கூர் வடக்கு பகுதி கிராம மக்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவினாசின் நிலையை அறிய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய பெற்றோர் மற்றும் கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்