ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

பூந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போத செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-25 22:00 GMT
பூந்தமல்லி, 

பூந்தமல்லி ஒன்றியம் சென்னீர்குப்பம் ஊராட்சி பள்ளிக்கூட தெருவில் அரசு தொடக்கப்பள்ளியை சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் பள்ளிக்கு தானமாக கொடுத்த இடத்தை ஆக்கிரமித்து இந்த வீடுகள் கட்டி இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வீடுகளை இடித்து அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் பூந்தமல்லி தாசில்தார் புனிதவதி, போலீஸ் உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் நேற்று பொக்லைன் எந்திரங்களுடன் சென்று வீடுகளை இடிக்க சென்றனர். இதில் ஒரு சிலர் மட்டும் வீடுகளில் உள்ள தங்களின் பொருட்களை காலி செய்தனர்.

ஆனால் குடியிருப்புவாசிகள் சிலர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காலி செய்யப்பட்ட 2 வீடுகளை இடித்து அகற்றினார்கள்.

இதற்கிடையே வீடுகளை அகற்ற கோர்ட்டு மூலம் தடை உத்தரவு வாங்கப்போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பிற்பகல் 3 மணி வரை அதிகாரிகள் அவகாசம் கொடுத்தனர். அதன்பிறகு மீண்டும் பொதுமக்கள் தரப்பில் எதுவும் தெரிவிக்காததால் மீண்டும் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி வாலிபர்களில் சிலர் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வாலிபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபர் ஒருவர் மயங்கியதால் அவரை பத்திரமாக கீழே இறக்கி ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சை அளிக்க போலீசார் அழைத்து செல்ல முயன்றனர்.

அப்போது பொதுமக்கள், அந்த ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆம்புலன்சில் மயக்க நிலையில் இருந்த நபரை இறக்கி பொதுமக்கள் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து மேற்கொண்டு வீடுகள் எதுவும் இடிக்காமல் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்