கொடைக்கானலில் வனப்பகுதிக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

‘கொடைக்கானலில் வனப்பகுதிக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை செய்துள்ளார்.

Update: 2019-02-26 22:15 GMT
திண்டுக்கல், 

கொடைக்கானல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தீ பிடித்து வருகிறது. அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகி வருகின்றன. இதற்கிடையே தீவிபத்து குறித்து கலெக்டர் டி.ஜி.வினய் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாய நிலங்களில் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் தீ வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அதையடுத்து காற்றின் காரணமாக விவசாய நிலங்களில் இருந்து வனப்பகுதி, அரசு புறம்போக்கு நிலங்களுக்கு தீ பரவி விடுகிறது. இதனால் அரிய வகை மரங்கள், தாவரங்கள் அழிந்து விடுகிறது. அதோடு வன உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

மேலும் சமூக விரோதிகள், சுற்றுலா செல்பவர்களில் சிலர் வனப்பகுதிக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள், விவசாயிகள் தங்களுடைய பட்டா நிலங்களில் காய்ந்த சருகுகள், குப்பைகளுக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும். வனப்பகுதிக்கு தீ வைக்கும் நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம் விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் ஏற்படும் தீ, தீ வைப்பு சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். இதற்காக கொடைக்கானல் கோட்ட வன அலுவலகத்தை 04542-240287, கொடைக்கானல் ஆர்.டி.ஓ.வை 9445000448, தாசில்தாரை 944500585 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்