நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்தாத 2 நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து கலெக்டர் தகவல்

நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்தாத 2 நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.

Update: 2019-02-27 23:00 GMT
தஞ்சாவூர்,

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தண்ணீரை சேமிக்க உதவும் நுண்ணீர் பாசன திட்டம் தமிழகஅரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் செலுத்த வேண்டிய நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தமிழகஅரசே ஏற்று கொண்டுள்ளது. நுண்ணீர் பாசன திட்டமானது தமிழகத்தில் 2018-19-ம் ஆண்டில் ரூ.1,671.15 கோடி நிதிஒதுக்கீட்டில் 2.55 லட்சம் எக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் ரூ.6.13 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1,138 எக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவதற்காக தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் 41 நுண்ணீர் பாசன நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எவர்கிரீன் இரிகேசன் மற்றும் பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நுண்ணீர் பாசன நிறுவனங்களும் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத காரணத்தினால் தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் 2 நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் யாரும் இந்த 2 நிறுவனங்களையும் அணுக வேண்டாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்