பஸ்சுக்காக காத்திருந்த போது மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேர் கைது

பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-27 23:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி தேங்காய்திட்டு புதுநகர் மருதம் வீதியை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 40). பெரிய மார்க்கெட் காய்கறி வியாபாரி. நேற்று முன்தினம் இரவு தனது தாயார் அஞ்சலையுடன் (வயது 63) ஆட்டுப்பட்டி அந்தோணியார் கோவில் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் அஞ்சலையின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சலை மற்றும் செந்தில்முருகன் ஆகியோர் கூச்சலிட்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் இது தொடர்பாக வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து அனைத்து போலீசாரையும் உஷார்படுத்தினர்.

அதன்படி இந்திராகாந்தி சிலை அருகே குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை அங்கிருந்த போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றனர். உடனே அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் போலீசார் அவர்களை சிறிது தூரம் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட 2 பேரையும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரை சேர்ந்த குமரவேலு(19), தினேஷ்(23) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிள், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்ததில் அவர்களுக்கு அபி என்கிற அபிமன்யு உதவியாக இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைதான குமரவேலு, தினேஷ் ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். சங்கிலி பறித்த சிறிது நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்