சுற்றுலா பஸ் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது வடமாநிலத்தவர்கள் 25 பேர் காயம்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் பகுதியில் வந்த போது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி பஸ் கவிழ்ந்தது.

Update: 2019-03-03 23:00 GMT
பாடாலூர்,

உத்தரபிரதேச மாநிலம் சித்தா நகர் மாவட்டம் யுதுவா தாலுகா துமாரியா கஞ்ச் மற்றும் டோக்கா கிராமங்களில் இருந்து 20 பெண்கள் உள்பட 55 பேர் ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க சுற்றுலா பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். பஸ்சை சித்தா நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் மதன் ஓட்டி வந்தார். இவர்கள் வந்த பஸ் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் பகுதியில் வந்த போது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கேசரிதேவி(வயது 69), அவுதாரே(75), அமந்திரா(70), காந்திதேவி(65), அவுதாரம்(70), ராம்ரதி(60), சுமந்திரா(70), லட்சுமி(52), நிர்மலாதேவி(50) உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாடாலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்