கடமலை-மயிலை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2019-03-04 23:00 GMT
கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான கிராமங்களுக்கு மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லாததால் வருசநாட்டில் உள்ள மூலவைகை ஆறு கடந்த 3 மாதங்களாக வறண்ட நிலையில் உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. எனவே உறை கிணறுகளில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அடுத்து வெயில் காலம் தொடங்க உள்ளதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் இல்லை. எனவே இந்த நிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றியத்தில் உறை கிணறுகளில் நீர்மட்டம் வற்றி கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் குடிநீருக்காக ஆட்டோ, மொபட் உள்ளிட்ட வாகனங்களில் வெகு தொலைவு சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை உருவானது. எனவே கடமலை-மயிலை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன்பு அதனை தடுக்க ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே சில கிராமங்களில் குடிநீர் வினியோகத்தின் போது குழாய்கள் சேதமடைந்திருப்பதாலும், திருகுகள் இல்லாததாலும் அதிக அளவு தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்