குறைதீர்க்கும் நாள் கூட்டம்: முறையாக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் மனு

முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-03-04 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கறம்பக்குடி தாலுகா பட்டமாவிடுதி கீழத்தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எங்கள் பகுதி மேட்டுப்பகுதியாக உள்ளதால், எங்கள் பகுதி குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும், இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிமேலாவது குடிநீர் முறையாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆலங்குடி தாலுகா வேங்கிடங்குளம் தெட்சிணாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் நீண்டகாலமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சிலர் குடிநீர் குழாயில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சிவிடுகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தும் ஊராட்சி செயலாளர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் உதவியுடன் குடிநீர் குழாய்களில் பொருத்தப்பட்டு உள்ள மின் மோட்டார் இணைப்புகளை துண்டித்து, அனைவருக்கும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவேண்டும். அதுமட்டுமின்றி எந்த திட்டங்களையும் முறையாக செயல்படுத்தாத ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆலங்குடி தாலுகா புதுக்கோட்டை விடுதி கும்மங்குளம் பகுதியை சேர்ந்த லெட்சுமி தனது உறவினர்களுடன் வந்து கொடுத்த மனுவில், எனது கணவர் நல்லதம்பி கடந்த 4.12.2018-ந் தேதி மலேசியாவில் இறந்து விட்டார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர கடந்த 5.12.2018-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தேன். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து அரசு உதவியுடன் எனது கணவர் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

கூட்டத்தில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், வீடற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி செய்து கொடுக்க வேண்டும். விபத்து சிகிச்சைக்கும், சிகிச்சை காலத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூ.5 லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. 

மேலும் செய்திகள்