கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் - தாசில்தார்கள் பிற மாவட்ட இடமாறுதலுக்கு எதிர்ப்பு

நெல்லை மாவட்டத்தில் பணியாற்றிய தாசில்தார்கள் பிற மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ததை கண்டித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வருவாய்த்துறை ஊழியர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-05 22:45 GMT
நெல்லை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி போலீஸ், வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்ட நாட்கள் பணிபுரிந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

இதே போல் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை அதிகாரிகளும் மாவட்டத்துக்குள் மாற்றம் செய்யப்பட்டனர். அதேசமயம் 11 தாசில்தார்கள் கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார்கள் கடும் கண்டனம் தெரிவித்து கடந்த 28-ந்தேதி முதல் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள 16 தாலுகா அலுவலகங்களிலும் வருவாய்துறை ஊழியர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறையினர் நேற்று அலுவலக நுழைவுவாயிலில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் சங்கரநாராயணன், தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மானூர் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க செயலாளர் சுப்பு தலைமையிலும், நெல்லை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மாரியப்பன், துணைதாசில்தார்கள் சந்திரசேகரன், ஜெயலட்சுமி, நாராயணன் ஆகியோர் தலைமையிலும் வருவாய்த்துறையினர் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிற மாவட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்றதாலுகா அலுவலகங்களிலும் வருவாய்த்துறையினர் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த அலுவலகங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

மேலும் செய்திகள்