சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை விடிய, விடிய பக்தர்கள் கண்விழித்திருந்து வழிபட்டனர்

சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கண்விழித்திருந்து சாமியை வழிபட்டனர்.

Update: 2019-03-05 22:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் தட்டார தெருவில் ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் சிவராத்திரியையொட்டி சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடத்தப்பட்டது.

மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பூஜை இரவு 8 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி, காலை 6 மணி என 6 கால பூஜை நடந்தது. இதையொட்டி சாமி வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோவில், செல்லப்பம்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி விழாவையொட்டி சிறப்புபூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளைம் அக்ரஹாரம் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் சாமிக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் இளநீர், தேன் அபிஷேகம் நடந்தது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவில் பூஜை நடந்தது.

இதேபோல் எஸ்.பி.பி. காலனி, காவிரிக்கரையில் உள்ள சோளஸ்வரர் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் விடிய, விடிய கண்விழித்து இருந்து சாமி தரிசனம் செய்தனர். நாமகிரிப்பேட்டை வீரபத்திரசாமி கோவிலில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோவில், பரமத்தி அங்காளம்மன் கோவில், மாவுரெட்டி பீமேஷ்வரர், கபிலர்மலை சிவபுரம், பில்லூர் வீரட்டீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் ,வேலூர் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் சிவராத்திரி விழா நடைபெற்றது.

மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில் சந்தனம்,விபூதி, அரிசிமாவு,ருத்ராட்சம், மலர்கள் உள்ளிட்ட 16 வகையான சிவலிங்கம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு முழுவதும் சிவ வழிபாடு, சிவகாமி உடனுறை நடராஜபெருமானுக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. பரமத்தி அங்காளம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பின்னர் கோதண்டராமசாமி கோவில் முன்பு இருந்து கரகம் எடுத்து கொண்டு அங்காளம்மன் கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அதன்பிறகு அரிசியில் கத்தியை நிறுத்தி வைக்கும் தரிசனமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்