மத்திய அரசின் திட்டத்தில் பயன் பெற விவசாயியிடம் லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அதிகாரி

மத்திய அரசின் திட்டத்தில் பயன் பெற விவசாயி ஒருவரிடம், கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-03-05 23:30 GMT
ஊத்துக்குளி,

5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தை 3 தவணையாக வழங்கும் திட்டத்தை மத்தியஅரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்காக 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ள விவசாயிகள், தங்களது நிலம் தொடர்பான ஆவணங்களையும், பட்டா சிட்டா மற்றும் ஆதார் அட்டையின் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகள் வழங்கி வருகிறார்கள்.

இந்த திட்டத்தில் பயன் அடையும் விவசாயி ஒருவரிடம் இருந்து திருப்பூர் ஊத்துக்குளி அருகே கூனம்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் நடராஜன் என்பவர் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் கூனம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியும், அவருக்கு எதிரே ஒருநாற்காலியில் விவசாயி ஒருவர் அமர்ந்து இருப்பதும், அந்த விவசாயிடம் கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் கேட்பது போலவும், பின்னர் விவசாயி கிராம நிர்வாக அதிகாரிஅருகே சென்று பணம் கொடுப்பது போலவும், அந்த பணத்தை கிராம நிர்வாக அதிகாரி வாங்குவது போலவும் பதிவாகி உள்ளது.

மேலும் மற்ற விவசாயிகளை சுட்டிக்காட்டி மற்ற விவசாயிகள் ரூ.500 கொடுத்து உள்ளனர், நீங்கள் ரூ.250 கொடுங்கள் என கிராம நிர்வாக அதிகாரி கேட்பது போலவும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் வாங்கும்போது அதை மர்ம ஆசாமிகள் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படு கிறது.

இதற்கிடையில் ஊத்துக்குளி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் (பொறுப்பு) வெங்கடலட்சுமி, கூனம்பட்டிக்கு சென்று பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் தொடர்புடைய கிராம நிர்வாக அதிகாரி நடராஜனிடமும் விசாரணை மேற்கொண்டார். அதை தொடர்ந்து இது தொடர்பான அறிக்கையை சப்- கலெக்டருக்கு அனுப்பி வைத்துள்ளார். 

மேலும் செய்திகள்