என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை வகுப்பறையில் சக மாணவர் கன்னத்தில் அறைந்ததால் விபரீத முடிவு

வகுப்பறையில் சக மாணவர் கன்னத்தில் அறைந்ததால் விஷம் குடித்து திருத்துறைப்பூண்டியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-03-06 22:30 GMT
புதுக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பூமாலை. இவரது மகள் மாலஸ்ரீ (வயது 21). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, களமாவூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். மாலஸ்ரீ புதுக்கோட்டை-திருச்சி சாலையில் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி கல்லூரிக்கு மாலஸ்ரீ சென்றார். பின்னர் கல்லூரி இடைவேளையின்போது தலைவலிப்பதாக கூறிக்கொண்டு மேஜையின் மீது புத்தகப்பையை வைத்து, அதில் தலையை வைத்து தூங்குவது போல் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த அதே வகுப்பில் படிக்கும் சக மாணவரான புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த ராஜாக்கிளி மகன் முகமது இப்ராஹிம் (21) மாலஸ்ரீயை பார்த்து ஏன் வகுப்பறையில் தூங்குகிறாய் என்று கூறி அவரது புத்தக பையை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மாலஸ்ரீ, முகமது இப்ராஹிமை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் முகமது இப்ராஹிம், மாலஸ்ரீ கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக தெரிகிறது. இதையடுத்து சக மாணவர்களுக்கு முன்னால் முகமது இப்ராஹிம் தன்னை அடித்ததால் அவமானம் தாங்காமல் வகுப்பறையில் மாலஸ்ரீ தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கல்லூரி முதல்வர், முகமது இப்ராஹிமை அழைத்து அவரை கண்டித்து எச்சரித்து அனுப்பியுள்ளார். மேலும் அந்த மாணவியிடம் மன்னிப்பு கேட்கவும் வைத்துள்ளார்.

இந்நிலையில் மாலஸ்ரீ வகுப்பு முடிந்ததும், தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். பின்னர் சக மாணவன் தன்னை அடித்ததை அவமானமாக கருதி, எலிமருந்தை (விஷம்) வாங்கி வந்து குடித்துள்ளார். பின்னர் விடுதியில் தங்கியுள்ள மற்ற மாணவிகளிடம் தான் விஷம் குடித்துவிட்டேன் என்று கூறியவாறு அறையில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த சக மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மாலஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார், மாணவி மாலஸ்ரீயின் தற்கொலைக்கு காரணமான முகமது இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்