மதுக்கடையை மூடக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் - சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுக்கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-06 22:30 GMT
ஊட்டி,

ஊட்டி அருகே கல்லட்டியில் மதுக்கடையை மூடக்கோரி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் மதுக்கடையை மூட வலியுறுத்தி அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து கல்லட்டி கிராம தலைவர்கள் முத்தன் மற்றும் நஞ்சுண்டன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

கல்லட்டி கிராமத்தை சுற்றி உள்ள பந்திமாரா, அத்திக்கல், ஏக்குணி, மசக்கல், சோலாடா, பிக்கட்டி, தட்டனேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் சார்பில், தலைகுந்தா-மசினகுடி சாலையில் கல்லட்டி கிறிஸ்தவ ஆலயம் அருகே கடந்த மாதம் திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி 5 முறை நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) கிராம பெண்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளோம்.

கல்லட்டி மலைப்பாதையில் தலைகுந்தா அருகே 2-வது வளைவில் ஒரு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த மாதம் அதே சாலையோரத்தில் கல்லட்டி பகுதியில் கூடுதலாக மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டு உள்ளது. இந்த கடை திறக்கப்பட்டதால், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அதிகமாக மது அருந்தி, அவர்களது உடல் நலத்தை கெடுக்கின்றனர். மது பிரியர்களால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். இல்லையென்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதனை தொடர்ந்து கிராம மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் வெளியே சென்று உள்ளார். ஆகவே கலெக்டர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரியை சந்தித்து மனு கொடுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை ஏற்று அவர்கள் திரும்பி சென்றனர். இந்த நிலையில் கிராம மக்கள் கல்லட்டியில் மதுக்கடை எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த புதுமந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நான்கு நாட்களில் மதுக்கடை குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்