நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு விவசாய சங்கம் ஆதரவு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு விவசாய சங்கம் ஆதரவு அளித்து திருச்சியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-03-06 23:00 GMT
திருச்சி,

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருச்சியில் மாநில தலைவர் பூ. விசுவநாதன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது. 40 தொகுதிகளிலும் கூட்டணியால் நிறுத்தப்படும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த விசுவநாதன், ‘மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடவேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து பொருட்களுக்கும், இடு பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்யப்படவேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை ரத்து செய்ய வேண்டும், காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கவேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி, ரெங்கநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எங்கள் சங்கம் சார்பில் தெரிவித்து உள்ளோம், என்றார்.

கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் உலகநாதன், துணைத்தலைவர் சிவசாமி சேர்வை, மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்