அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள்-மாணவர்கள் உண்ணாவிரதம்

பழனி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பொதுமக்கள், மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2019-03-06 23:15 GMT
நெய்க்காரப்பட்டி, 

பழனி அருகே பாப்பம்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள கிராம பகுதிகளில் சாலை, குடிநீர், கழிவுநீர் ஓடை, தெருவிளக்கு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிராம நல ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து கிராம நல ஒருங்கிணைப்புக்குழு, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி பாப்பம்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். சுதந்திர போராட்ட தியாகி முத்து வரவேற்றார். போராட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கூறுகையில், பாப்பம்பட்டி ஊராட்சியில் மக்களுக்கான குடிநீர், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக பாப்பம்பட்டி பிரிவில் இருந்து அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் குதிரையாறு அணை செல்லும் சாலை பணியும் முழுமையடையாமல் உள்ளது. மேலும் மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமத்துக்கு நிரந்த கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

குளம், ஓடைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுகிறது. கஞ்சா விற்பனை நடப்பதால் மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மேற்கண்ட பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த போராட்டத்தில் ஊர் முக்கிய பிரமுகர்கள் ராஜேந்திரன், குருசாமி மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்