சேலத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கலெக்டர் ரோகிணி வழங்கினார்

சேலத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை கலெக்டர் ரோகிணி நேற்று வழங்கினார்.

Update: 2019-03-07 23:00 GMT

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி, தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:–

தெருவோர வியாபாரம், ரிக்ஷா தொழில், கட்டுமானம், பழைய பொருட்கள் சேகரித்து வாழ்பவர்கள், வீட்டுவேலை செய்வோர், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், பீடிசுற்றுபவர்கள், கைத்தறி தொழிலாளர்கள், தோல் பதனிடும் தொழில் செய்பவர்கள் ஆகியோர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக உள்ளனர்.

வயதான காலத்தில் இவர்களுக்கு பாதுகாப்புக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் புதிய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தொழிலாளரின் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தொழிலாளி அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு உள்ளவராக இருக்க வேண்டும். 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் சேர்ந்து 60 வயது வரை மாதந்தோறும் சந்தா செலுத்த வேண்டும். 60 வயதுக்கு பிறகு ரூ.3 ஆயிரம் மாத ஓய்வூதியமாக பெறலாம். சம்பந்தப்பட்ட தொழிலாளர் மரணம் அடைந்தால் 60 வயதுக்கு பிறகு அவரது வாழ்க்கை துணையான கணவன் அல்லது மனைவிக்கு 50 சதவீதம் தொகை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.தொழிலாளர்கள் பதிவு செய்து 60 வயதுக்கு முன்பாக திடீரென்று இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவி தொடர்ந்து சந்தாவை செலுத்தி வந்து பயன்பெறலாம்.

குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவர் மாதந்தோறும் ரூ.55–ம், அதிகபட்சமாக 40 வயது நிரம்பியவர் மாதந்தோறும் ரூ.200–ம் செலுத்த வேண்டும். அதே அளவிலான பங்கு தொகையை மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் பயனாளியின் கணக்கில் செலுத்தப்படும். வயது வாரியாக சந்தா தொகையில் மாற்றம் உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் சுயமரியாதையுடன் வாழவும், ஓய்வுக்கு பிறகு யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இப்போது சிறிய அளவிலான தொகையை சேமித்து வந்தால் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வழிவகை செய்யும். அனைத்து தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் பொது சேவை மையங்களில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பிலும் இத்திட்டத்தில் இணைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திட்டம் குறித்து அரசு பொது சேவை மையங்களை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

நிகழ்ச்சியில் சேலம் மண்டல ஆணையாளர் ஹிமான்சுகுமார், தொழிலாளர் உதவி ஆணையாளர் மஞ்சள்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்