சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Update: 2019-03-07 23:30 GMT

சேலம்,

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 10 மணிக்கு திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம். அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக்கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து உடனே சென்னை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சேலம் மாநகர போலீசாரை தொடர்பு கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்துமாறு அறிவுறுத்தினர்.

இதன்பேரில் சேலம் டவுன் உதவி கமி‌ஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் உடனடியாக கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், சேலம் மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எட்வர்ட் தலைமையிலான போலீசார், மோப்பநாய் ராபினுடன் வந்தனர். பின்னர், அவர்கள் கலெக்டர் அலுவலக வெளிப்புற பகுதியில் தீவிரமாக சோதனையிட்டனர்.

இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் மோப்ப நாய் ராபின் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். நுழைவு வாயில் பகுதியில் ஓரமாக வைத்திருந்த 4 குப்பை தொட்டிகளையும் தலைகீழாக கவிழ்த்து மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதித்தனர். அப்போது மஞ்சள் நிறத்தில் துணி பை ஒன்று கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தபோது, பேப்பர் கட்டுகள் துண்டு, துண்டாக இருந்தது.

ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலக பின்புற பகுதி மற்றும் 4 மாடிகளிலும் உள்ள அனைத்து அரசு அலுவலக அறைகளிலும் மோப்ப நாய் ராபின் உதவியுடன் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மர்ம நபர் பீதியை ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை கொண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 மணி நேரம் நடந்த வெடிகுண்டு சோதனையால் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்